‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஓபிஎஸ்க்கு அதிமுக சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ்க்கு பலாப்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் 'ஒ' இன்ஷியல் கொண்ட மற்றொரு பன்னீர்செல்வமும் அதே சின்னம் கேட்ட நிலையில், குலுக்கல் முறையில் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகானுக்கும் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 4 பேரை திமுக கூட்டணி களமிறக்கி இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.