எதிர்க்கட்சிகள் அமளி | நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றம் கூடிய சில நொடிகளிலே எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் நேற்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல், மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கிய சில நொடிகளிலே எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.