சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும் திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதால் எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக வாக்காளர் திருத்த பணிகள், ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.