ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!
ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை குவித்த 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படம் ஓடிடியில் தற்போது வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஒப்பன்ஹெய்மர்' ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றது. நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு!
இந்த திரைப்படம், கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஒப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்து இருந்தார். அத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆஸ்கருக்கு விருதுக்கு முன் கோல்டன் குளோப் மேடையிலும் 5 விருதுகளை 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படம் வென்றது.
கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பின் உலகின் அனைத்து திரைத்துறைகளும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் சரிவை எதிர்கொண்டு வந்தன. திரையரங்கத்தை நோக்கி மக்களை ஈர்க்க நல்ல படங்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப் பட்ட பல படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான நிலையில் வெளியான ஓப்பன்ஹெய்மர் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படை எடுக்க வைத்தது . இந்தியாவில் மட்டும் 150 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்த இந்தப் படம் உலகளவில் 8 ஆயிரம் கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படம் மார்ச் 21 ஆம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.