"ஆபரேஷன் சிந்தூர்" - பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது.
குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவர் என்று குறிப்பிட்டு, ஜெய்ஹிந்த் என்றும் இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.