ஆபரேஷன் சிந்தூர் எதிரோலி - ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மாற்றம்!
பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் பொதுமக்களும் தாக்குதலில் பாதிப்படைந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்து பயங்கவாதிகளின் முகாம்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக கூறியது.
இதனிடையே எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் எல்லை பகுதியில் பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்து வருகிறது. அதே போல் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் இன்று(மே.07) நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாளை(மே.07) நடைபெறவுள்ள பஞ்சாப் Vs டெல்லி மற்றும் மே 11 ஆம் தேதி நடைபெற உள்ள பஞ்சாப் Vs மும்பை ஆகிய போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நடந்து வரும் சூழலில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.