மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் - எதிர்கட்சிகள் வெளிநடப்பு!
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்பட்டு பின் அடங்கியது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளால் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு ,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதில் அளித்தனர்.
இந்த நிலையில் இன்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி விவாதத்தில் பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.