குப்பநத்தம் அணை திறப்பு - செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
குப்பநத்தம் அணை திறக்கப்பட்டுள்ளதால், செய்யாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த
சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள, 59 அடி முழு கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணை தற்போது 54.30 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வினாடிக்கு 110 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, இந்த 110 கன அடி நீர்வரத்து அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் மழை அடிவாரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து
அதிகரிக்கக் கூடும் என்பதால், அணையின் இருப்பை தாண்டி வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்பட உள்ளது. இதனால் செய்யாற்று கரையோர பகுதி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான செங்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிறைந்து
வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.