வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு. வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி இன்று (டிச. 23) அனைத்து கோயில்களிலும் தொடங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. இந்த ஏகாதசி விரதம் 3 நாள் இருக்கக்கூடிய விரதமாகும். பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி, இந்தியாவின் முக்கியமான பெருமாள் கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை மணி 1.40க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரையில் அமைந்துள்ள, அழகர்கோயிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
அதேபோல், பழனி அருள்மிகு ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் திறப்புவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் வஞ்சுள வள்ளி தாயாருடன் பரமபத வாசல் வழியே பிரகாரத்தில் வலம் வந்தார்.
நாமக்கல்லில் குடைவரை கோயிலான அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மார்கழி பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவாரூர் அருகே 108 திவ்யதேசங்களில் 27வது தலமான பக்தவத்சல பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழாவில் வாண வேடிக்கையுடன் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமான அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஆதிதிருவரங்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதி திருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, கடலூர் ,புதுச்சேரி, கர்நாடகா, பெங்களூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பாற்கடல் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பல்வேறு பெருமாள் கோயில்களில், பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.