குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! - #Pandalur - ல் பரபரப்பு!
பந்தலூர் அருகே வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து ஒருவரை தாக்கிய 3 யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் இன்று
அதிகாலை வனப்பகுதியிலிருந்து வந்த மூன்று யானைகள் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் வாழை, தென்னை போன்ற மரங்களை யானைகள் உடைத்து சாப்பிட்டபோது அதனை விரட்ட முயன்ற குஞ்சு மொய்தீன் என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து சாலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள் : பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கும்கி
பயிற்சி பெற்ற விஜய் என்ற கும்கி யானையை இரவு 8 மணி அளவில் வனத்துறையினர்
சேரம்பாடி சப்பந்தோடு குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர். இரவு வனப்பகுதியிலிருந்து நுழைந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால், அவற்றை தடுக்க கும்கி யானை விஜய் உதவியுடன் வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வனப்பகுதியிலிருந்து நுழைந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.