For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உலகிலேயே இந்தியாவில் தான் இளம் பெண்கள் வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்கின்றனர்” - #ILO அறிக்கை!

09:59 PM Sep 24, 2024 IST | Web Editor
“உலகிலேயே இந்தியாவில் தான் இளம் பெண்கள் வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்கின்றனர்”    ilo அறிக்கை
Advertisement

இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்வதாகவும், உலகிலேயே இதுதான் அதிகம் எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

அண்மையில், புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் அன்னா செபாஸ்டியன் பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் உருக்கமாக எழுதிய கடிதம் கவனம் பெற்றது. அக்கடிதத்தில் அன்னாவின் தாயார், “எனது மகள் சிஏ தேர்வில் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றாள். இதுதான் அவளது முதல் பணி. ஓய்வின்றி உழைத்தாள். நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது. மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள். ஓவர் டைமாக பணியாற்ற வேண்டிய நிலை. வார விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டி இருந்தது.

நாங்கள் வேலையை விடுமாறு தெரிவித்தோம். ஆனால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளை தடுத்துவிட்டது. இப்போது அவளே இல்லை. அவளது இறுதிச் சடங்குக்கு அவள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எங்களைப் போன்ற எந்தவொரு ஊழியரின் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது உருக்கமான வார்த்தைகள் உள்ளங்களை உலுக்கியது. இந்நிலையில், இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், உலகிலேயே இது அதிகம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெற்றது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின், தரவுகளின்படி, அன்னா போன்ற பணியில் உள்ள இந்தியப் பெண்கள் உலகளவில் அதிக நேரம் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக இளம் பெண் ஊழியர்கள் என்றால் அவர்கள் பணியாற்றும் நேரமும் அதிகம் எனப் புலப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 56.5 மணி நேரம் பணியாற்றியுள்ளனர். வாரத்துக்கு 5 நாட்கள் பணி எனக் கணக்கிட்டால் நாளைக்கு 11 மணி நேரம் வீதம் வேலை செய்துள்ளனர். அதுவே 6 நாள் பணி எனக் கணக்கில் கொண்டால் ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணி செய்துள்ளனர். அறிவியல், தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளில் உள்ள பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 53.2 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஒரு ஆசிரியை சராசரியாக வாரத்துக்கு 46 மணி நேரம் பணி செய்துள்ளனர்.

இந்தியாவில் பெண் ஊழியர்கள் பணி நேரமானது அவர்களின் வயது பொறுத்து அமைகிறது. வயது குறையக் குறைய பணி நேரம் அதிகரிக்கிறது. ஐடி / ஊடகத் துறையில் உள்ள பெண்களில் 24 வயது வரையிலானோர் வாரத்துக்கு சராசரியாக 57 மணி நேரம் வரை பணி செய்கின்றனர். மற்ற துறைகளில் இதே வயது வரம்பில் உள்ளவர்கள் 55 மணி நேரம் பணி புரிகின்றனர். இந்த சராசரியை உலகத் தரவுகளை ஒப்பிடும்போது இருப்பதிலேயே இந்தியாவில் தான் பணி நேரம் அதிகமானதாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் ஜெர்மனியில் ஐடி / ஊடகத் துறை பெண்கள் வாரத்துக்கு 32 மணி நேரமும், ரஷ்யாவில் இதே துறை பெண்கள் வாரத்துக்கு 40 மணி நேரமும் பணி புரிகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/VigneshJourno/status/1838405864283345357

இந்தியப் பெண்கள் உலகளவில் அதிக நேரம் வேலை செய்வதோடு மட்டுமல்லாது உலகிலேயே மிக அதிகமான ஆணாதிக்கம் கொண்ட பணிச்சூழலிலும் பணி புரிகின்றனர் என அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுளது. இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் 8.5 சதவீத பெண்களும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 20 சதவீத பெண்களும் பணியாற்றுகின்றனர். இந்த இடைவெளியும் கூட இந்தியாவில் அதிகம் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.

ஐஎல்ஓ.,வின் இந்த அறிக்கையும், அன்னாவின் தாய் எழுதிய கடிதமும் இந்தியாவில் பெண்களின் பணி நேரங்கள் தொடர்பாக புதிய வரையறைகளுகான தேவை என்பதை உணர்த்துவதாக பணியாளர் நலன் சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags :
Advertisement