பகுதிநேர 1400 இளங்கலை பொறியியல் இடங்களுக்கு 720 பேர் மட்டுமே விண்ணப்பம்!
பகுதிநேர இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான 1,400 இடங்களுக்கு 720 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் பகுதி நேர இளங்கலை பொறியியல் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கு மொத்தம் 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிநேர பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மொத்தமுள்ள 1400 இடங்களுக்கு வெறும் 720 விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி தெரிவித்துள்ளது.
பகுதிநேர இளங்கலை பொறியியல் படிப்பில் சேர டிப்ளமோ முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். பகுதிநேர பிஇ 4 ஆண்டு படிப்பாகும்.