#TNFactCheck | சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தவறான தகவல்!
சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :
" சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழ்நாடு அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!
இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே
பெய்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிப்பார்ப்பு குழு பதிவிட்டுள்ளதாவது :
"சென்னையில் நேற்று (14.10.2024) காலை 8.30 மணி முதல் இன்று (15.10.2024) காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 10 செ.மீ மழையும், மணலி, திருவிக நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"
இவ்வாறு தமிழ்நாடு உண்மை சரிப்பார்ப்பு குழு தெரிவித்துள்ளது.