ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி! - 2 நபர்கள் கைது : 5 செல்போன்கள் பறிமுதல்!
சென்னை அருகே மணப்பாக்கத்தில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில்
வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு
வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். பின்னர், அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் சொன்ன வார்த்தைகளை நம்பி, அதில் முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் மொத்தமாக ரூ.1,70,53,938/-ஐ செலுத்தியுள்ளார். அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி நபர்கள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர்.
அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டு வற்புறுத்தவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படியுங்கள் : மும்பையில் தொடரும் கனமழை - வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுவின் பேரில் சைபர் கிரைம்
டெல்டா-1 அணி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த
குணசீலன், இளையகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், 4 ஆதார்
கார்டுகள், 9 ஏடிஎம் கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி காசோலைகள்
ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மோசடியை செய்வதற்காக பல்வேறு நபர்கள் மற்றும் போலியான நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் ஆரம்பித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.விசாரணைக்குப்பிறகு கைது செய்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.