தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; கட்டடக் குவியலுக்குள் சிக்கிய உடல்கள் - உறவினர்களை தேடும் பாலஸ்தீனர்கள்...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், கட்டடக் குவியலுக்கிடையே சிக்கிய உடல்களை, உறவினர்களை மீட்கும் பணியில் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால், வடக்குக் காஸா பகுதியில் மட்டும் தரைவழி தாக்குதலை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது தெற்கு பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட இஸ்ரேலின் குண்டுவீச்சால் காஸாவின் 50 சதவீத கட்டிடங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. கட்டடக் குவியலுக்கிடையே சிக்கிக் கொண்டிருக்கும் உடல்களை, காஸா மக்கள் மண்வெட்டி, இரும்பு கம்பி பல நேரங்களில் கைகளைக் கொண்டே கட்டடக் குவியலுக்கிடையில் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்:காளிதாஸ் ஜெயராமின் ‘அவள் பெயர் ரஜ்னி’ டிரைலர் வெளியீடு!
அதற்கும் மேலாக, இடிபாடுகளிடையே மீள வழியில்லாமல் மாட்டிக் கொண்டிருக்கும் மனிதர்களை மீட்பது உடனடி தேவையாகவுள்ளது.இதுவரை, இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11,200-க்கும் மேல் என காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கட்டடக் குவியலுக்குள் சிக்கியுள்ளனர் என்கிறார்கள் பாலஸ்தீனர்கள்.
தங்களின் குடும்பத்தில் தொலைந்தவர்களையும் உறவினர்களையும் தேடும் பணியில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். உணவு, குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் காஸா தவிக்கும் நிலையில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் இங்கு ஆடம்பரமானவை.
போர் எப்போது முடியும் எனத் தெரியாத சூழலில் தொலைந்து போன தங்கள் குடும்பத்தினர் உயிரோடு இருப்பார்கள் என்று நம்பும் நிலையைக் கடந்து அவர்கள் உடல் கிடைத்தாலே அது அதிர்ஷ்டம் என்கிற நிலைக்கு காஸா மக்கள் வந்துள்ளனர்.