#OneNationOneElection - விரைவில் அமல்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்து 100 நாட்களை எட்டிய நிலையில், ஆளுங்கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமையானது இந்த ஆட்சி முழுவதும் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த அரசின் பதவிக் காலம் முடிவதற்குள் 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் கடந்த மாதம் டெல்லி செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்திக் கூறியிருந்தார். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது :
"தேசத்தின் முன்னேற்றத்துக்கு செங்கோட்டையில் இருந்து அரசியல் கட்சிகள் உறுதியேற்க வேண்டும். தேசத்தின் வளங்கள் சாமானிய மனிதனுக்காகப் பயன்படுவதையும் அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' என்ற கனவை நனவாக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : AUSvsENG அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மழையால் ரத்து!
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 தினங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்திருந்தது.
இதை அமல்படுத்த எந்தக் காலக்கெடுவையும் இக்குழு நிர்ணயிக்கவில்லை. இதை அமல்படுத்த ஒரு செயலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று இக்குழு கூறியிருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்திருந்தது. இதனிடையே, வரும் 2029-ஆம் ஆண்டு முதல், மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் தனியாக பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது