ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது - மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த பெரும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதில்,ஷேக் ஹசீனா மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாட்சியாக மாறிய முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது. இந்த தீர்ப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை. கலவரம் நேரத்தில் நாங்கள் நிலைமையின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். ஆனால் பொதுமக்கள் மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று வகைப்படுத்த முடியாது.
கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்கவோ சரியான தீர்ப்பு வழங்கும் நோக்கத்தையோ இந்த தீர்ப்பாயம் கொண்டிருக்கவில்லை. இது வங்காளதேசத்தின் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்குவதற்கும், அவாமி லீக்கை கட்சியை அழிப்பதற்குமான இடைக்கால அரசாங்கத்திற்குள் இருக்கும் நபர்களின் வெட்கக்கேடான மற்றும் கொலைகார நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
2010 ஆம் ஆண்டு வங்கதேசம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சேர நாங்கள் வழிவகுத்தோம், மியான்மரில் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம், மின்சாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தினோம், மேலும் 15 ஆண்டுகளில் 450% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு வித்திட்டோம், மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டோம். இவை வரலாற்று சாதனையாகும்
இந்த சாதனைகள் மனித உரிமைகள் மீதான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன. ஆனால் யூனுஸ் மற்றும் அவர் உடனிருப்பவர்களிடம் ஒப்பிடக்கூடிய சாதனைகள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.