முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை - ஐந்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !
சென்னையில் புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி மனைவி பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மீன் பிடி தொழில் செய்து வந்த வினோத் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது முன் விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி, பீர் பாட்டில் மற்றும் இரும்புராடால் தாக்கி வினோத்தை கொலை செய்துள்ளனர்.
இதில் வினோத்தின் முகம் முழுவதும் சிதைந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மீன்பிடித் துறைமுக போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ராயபுரம் உதவி ஆணையர் ராஜ் பால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் உயிரிழந்த வினோத்தின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உலகநாதன் என்பவர் நேற்று திடீர் நகரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. காசிமேடு பகுதியில் தொடர் கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து வர கோரிக்கை வைத்துள்ளனர்.