மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்!
பண்ணந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை மட்டை உரிப்பதற்காக அக்கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி என மூவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த மலை தேனீக்களின் கூட்டம் மூவரையும் தாக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் தேனீக்கள் தாக்கியதால் நிலை குலைந்து போன மூவரும், அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர்.
ஆனால் இவர்களை விடாமல் துரத்தி சென்ற தேனீக்கள், பேருந்து நிலையத்தில் கூலி வேலைக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெரியசாமி(45) மற்றும் காந்தி(42) ஆகிய இருவரையும் சேர்த்து கொட்டியுள்ளன. இதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும் தேனீக்கள் கொட்டுவது தாங்க முடியாமல் கத்திக்கொண்டு ஓடியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீப்பந்தம் கொண்டு தேனீக்களை விரட்டி அடித்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த பெரியசாமியின் உடல் உடற்கூறாய்வுக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.