சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதனிடையே, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், செ ன்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.