"ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே" - முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்தது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்களை நடத்த வழி உள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டால், சட்டப்பேரவைத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுடன் நடத்த வழி உள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடர்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை இரண்டாவது சுற்றிலும் நடத்தலாம்.
தொங்குப் பேரவை, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், மீதமுள்ள ஐந்தாண்டு காலத்திற்குள் புதிய தேர்தல் நடத்தலாம், முதல் முறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, மக்களவைத் தேர்தல் நடக்கும் காலம்வரை, மற்ற பேரவைகளின் பதவிகள் நீடிக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கேற்ப, தேர்தல் ஆணையம், ஒரே வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகளை மக்களவை, பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் உருவாக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம் மற்றும் பலன்கள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.