"ஒரே நாடு ஒரே கல்வி அட்டை" APAAR அட்டையின் நோக்கம் என்ன?
"ஒரே நாடு ஒரே கல்வி அட்டை" என்ற அடிப்படையில் APAAR அட்டையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்றவற்றை தொடர்ந்து ஒரே நாடு ஒரே கல்வி அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அட்டை ஆதார் அட்டை போல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
கல்வியை தடையற்றதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதற்கு மாணவர்கள், பள்ளிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே ஒரு இணைப்பு பாலமாக APAAR அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் எந்தப் பள்ளி படித்திருந்தாலும் அல்லது எந்த கல்லூரியில் படித்தாலும், அவர்களின் கற்றல் பயணம் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கண்காணிக்க இது உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை மாணவர்கள் அனைத்து இடங்களுக்கும் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான தேவையை இந்த அட்டையின் மூலம் குறைக்க உதவுகிறது. இந்த அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்
அதே போல அபார் அடையாள அட்டை பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு மாறுவதற்கும் மற்றும் கல்லூரிகளுக்கு மாறுவதையும் எளிமையாக்கும். இது குறித்த மேலதிக தகவல்களுக்கு abc.gov.in இணையதளத்தை பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.