கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நான்கு நபர்களுக்கு மேல் அமீபிக் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மூளைக்காய்ச்சல் நெக்லேரியா பவுலரி என்ற அமீபா வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமுட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மனக்குழப்பம் பிரம்மை போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
முன்னதாக, கடந்த 23 ம் தேதி அகில்(27) என்பவர் அமீபிக் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த நிலையில் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அனிஷ் (26) என்பவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீபிக் மூளைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டவருக்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : கலவரபூமியான வங்கதேசம்! பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா! ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!
இதற்கு முன், அச்சு (25), ஹரிஷ்(27) தனுஷ்(26 )ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனூமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது. இதுவரை அமீபிக் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. அதிக பாசிகள் மற்றும் விலங்குகளைக் குளிப்பாட்டும் தண்ணீரைப் பயன்படுத்துபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேங்கி நிற்கும் மாசுபட்ட நீரில் குளிக்க வேண்டாம் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.