#Onam | "நெருங்கியவர்கள் அன்புடனும் ஒற்றுமையுடனும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்" - சிஎஸ்கே வாழ்த்து!
ஓணம் பண்டிகையில் நம்மை நெருங்கியவர்கள் அன்புடனும் ஒற்றுமையுடனும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாள மக்களும் கொண்டாடும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து கோயிலில் சாமி தரிசனம் செய்வர்.
குடும்பத்துடன் பலவித உணவு வகைகளை சமைத்து கடவுளுக்கு படைத்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருவதாக மலையாள மக்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ஓணம் வாழ்த்துக்கள்! இந்நாளில் நம்மை நெருங்கியவர்கள் அன்புடனும் ஒற்றுமையுடனும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.