ஓணம் பண்டிகை - கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை!
கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 10 நாட்களாக கேரளாவில் மது விற்பனை களைகட்டியது. இதனிடையே ஓணம் பண்டிகையை ஒட்டி மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி 826 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. அதிலும் ஓணத்திற்கு முந்தைய நாள் மட்டும் 137 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.21% அதிகமாகும். கடந்த ஆண்டு இதே நாளில்126 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு அதிகபட்சமாக மதுபானம் விற்பனையானது. அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது.