தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப
திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இத்தீப திருவிழாவானது 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நிறைவு நாளான 26 ஆம் தேதியன்று கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலையார் ஆலய கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இதனை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னேற்பாடாக திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் விதமாக பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.