கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை, திண்டுக்கல் என பிற மாவட்டங்களில் இருந்தும் குமாரபுரம், ஆரல்வாய்மொழி என உள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும். அதைப்போல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அமெரிக்கவில் திரைப்படங்களை பார்க்க ரூ.1,66,540 தரும் நிறுவனம்!
இந்நிலையில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருக்க துவங்கியதை அடுத்து பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதேபோன்று கேரள மாநிலத்திற்கும் தோவாளை மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் பூக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நேற்று விற்கப்பட்ட விலையில் இருந்து கிலோவிற்கு 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று 1300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதே போன்று பிச்சிப்பூ கிலோ 750 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 400 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 180 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி பூ கிலோ 250 ரூபாய்க்கும், மஞ்சள் செவ்வந்தி கிலோ 120 ரூபாய்க்கும், கிராந்தி கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனையானது.