"குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடைகால வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 1196 செவிலிய பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கோடைகாலத்தில் நீர்ச்சத்து குறையாமல் உடலை பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன். காலை 11 மணியளவில் தொடங்கி மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 483 பேர் நிரந்தர செவிலியர்கள்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 713 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி என 1196 பேருக்கு நியமன ஆணைகளையும் வழங்கி படிப்படியாக காலியிடம் ஏற்படும் போது நிரந்தர பணியாளர்களாக இவர்கள் மாற்றப்படுவார்கள். தனியார் குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குட்கா பொருட்களை யாரேனும் கடையில் விற்பனை செய்வது பொதுமக்களுக்கு தெரிந்தால் 9444042322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்" என தெரிவித்தார்.