வழக்கம் போல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் - அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது..?
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் மாநகரப் பகுதிகளுக்குள் இயங்கி வருகின்றன.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல மாநகரப் பகுதிக்குள் இயக்கப்பட்டு வருகிறது. தை பூசம் , குடியரசு தினம் என அடுத்தடுத்து விடுமுறைகள் வரவிருக்கும் நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சென்னை புறநகரில் முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க போதிய இட வசதி அளிக்கும் வரை தொடர்ந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசின் அறிவிப்புகளையும் தாண்டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.