கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் - பூந்தமல்லியில் பறிமுதல்.!
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்தும், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கின. இதனையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனையடுத்தும், பேருந்துகள் இயங்கி வருகின்றன.