மத குருக்களை மிரட்டி ரூ.102 கோடி பணம் பறிப்பு - தாய்லாந்தை அதிரவிட்ட பெண்!
தாய்லாந்தில் "மிஸ் கோல்ஃப்" என அறியப்படும் 30 வயதான விலாவன் எம்சாவத் என்ற பெண், மூத்த புத்தத் துறவிகளை மயக்கி, அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து மிரட்டி பெருந்தொகை பறித்த குற்றச்சாட்டில் பேங்காக்கின் நோந்தபுரி மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தாய்லாந்து முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஒரு பிரபலமான மடாதிபதி பேங்காக் கோயிலை விட்டு வெளியேறியபோது, காவல்துறை சந்தேகத்தின் பேரில் அவரை விசாரித்தது. அப்போதுதான் இந்தப் பெண் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் பெண் மடாதிபதியிடம் தனது வயிற்றில் அவரது குழந்தையைச் சுமப்பதாகக் கூறி, 1.90 கோடி ரூபாய் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மேலும், அந்த மடாதிபதி உட்பட பல புத்தத் துறவிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, விலாவன் எம்சாவத்தின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது மொபைல் போனில் 80,000-க்கும் மேற்பட்ட நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அந்தப் பெண் பல மடாதிபதிகளையும் துறவிகளையும் மிரட்டி வந்துள்ளார் என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், அவர்களிடம் இருந்து சுமார் 385 மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 102 கோடி ரூபாய்) பணத்தை பறித்துள்ளார். இந்தப் பணத்தை அவர் ஆன்லைன் சூதாட்டத்திலும் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத குருமார்களின் ஒழுக்கமற்ற நடத்தை மற்றும் இந்தப் பெண்ணின் மோசடிச் செயல்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தாய்லாந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. துறவிகளுக்கான ஒழுக்க விதிகளை மறுபரிசீலனை செய்ய ஒரு சிறப்புக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. மடாதிபதிகள் மற்றும் துறவிகளின் இந்த தவறான நடத்தையால், தாய்லாந்து மக்களிடையே மதத்தின் மீதான நம்பிக்கை குறித்து பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம், மத அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.