Olympics 2024 : சென் நதியில் துவக்க நிகழ்ச்சிகளுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு - படகு மற்றும் கப்பல்களில் அணிவகுப்பு நடத்த திட்டம்!
ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிகளுக்காக சென் நதியில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளின் அணிகள் படகு மற்றும் கப்பல்களில் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டிகள் இன்று முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
முன்னதாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஒலிம்பிக் ஜோதி இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து அந்த ஜோதி ஓட்டம் நிறைவுபெறும். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீபத்தை ஏற்றப்பட்டு போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.
பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒலிம்பிக்ஸ் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11மணி அளவில் நடைபெற உள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, மைதான வளாகத்துக்குள் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மைதானத்திற்கு வெளியே நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாரீஸில் உள்ள பிரபலமாக அறியப்படும் சென் நதியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் படகு மற்றும் கப்பல்களில் அணிவகுக்கவுள்ளன.
நதியின் இரு பக்கமும் நின்று அதைப் பார்வையிட 3,20,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அணிவகுப்பில் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி முன்னிலை வகிக்கவுள்ளனர்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்வில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியின்போது பாரீஸின் வான்பரப்பில் 150 கி.மீ. அளவுக்கு விமானங்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.