சொந்த ஊர் திரும்பிய ஒலிம்பிக் நாயகன் #Mariyappan... பொதுமக்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ச்சி!
பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய தடகள வீரர் மாரியப்பனுக்கு மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் தடகள வீரர் மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த ஷரத்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் இன்று சொந்த ஊரான ஓமலூருக்கு திரும்பினார். அவருக்கு ஊர் எல்லையான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் பட்டாசு வெடித்தும் , தாரை தப்பட்டை அடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தங்கமகன் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பைக் கண்டு மாரியப்பன் நெகிழ்ந்தார். கடந்த 2016-ம் பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து டோக்கியாவில் நடைபெற்ற 2020ம் ஆண்டு பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த நிலையில், தற்போது வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.