மரத்தடியில் உறங்கிய தங்கப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்திற்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டு கிராமத்தில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் அறைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அங்கு தங்கும் வசதிகள் குறித்தும் புகார் தெரிவித்துள்ள அவர், கிராமத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரத்தடியில் வெள்ளை டவலை விரித்து உறங்கியுள்ளார்.
அவர் இப்படி உறங்குவதை சவுதி அரேபிய படகோட்டும் வீரர் ஹுசைன் அலிரேசா புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியின் தாமஸ் செக்கோன் பேசுகையில், “பல விளையாட்டு வீரர்கள் இந்த காரணத்தைக் கூறி தான் நகர்ந்து வருகிறார்கள். இது ஒரு சாக்கு அல்ல, இது அனைவருக்கும் தெரியாத உண்மை.
வழக்கமாக, நான் வீட்டில் இருக்கும்போது, நான் எப்போதும் மதியம் தூங்குவேன். இங்கே நான் உண்மையில் வெப்பத்திற்கும், சத்தத்திற்கும் இடையில் போராடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.