ஓஹ்.. இதுதான் ரகசியமா? - வான்கடே மைதானத்தில் பந்துகளை பறக்கவிட்டதன் சீக்ரெட்டை பகிர்ந்த SKY!
ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் பந்துகளை பறக்கவிட்டு அதிரடியாக விளையாடியதன் ரகசியன் குறித்து சூர்யகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ ப்ளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ரஜத் பட்டிதார் 50 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி 199 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் விளாசினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தான் அதிரடியாக ஆடியதன் ரகசியம் குறித்து சூர்யகுமார் யாதவ் ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது..
“ ஒவ்வொரு போட்டியின்போதும் ஃபீல்டிங் நிற்கவைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதற்கேற்ப ஷாட்டுகளை விளையாட முயற்சிக்கிறேன். போட்டியின் போது அடிக்கும் புதுமையான ஷாட்டுகளை வலைப்பயிற்சியின்போதுதான் முயற்சிக்கிறேன். அந்த ஷாட்டுகளை எனது தசைகள் நினைவில் வைத்துள்ளன. ஆர்சிபிக்கு எதிராக நான் விளையாடிய அனைத்து ஷாட்டுகளுமே எனக்கு பிடித்திருந்தது. வான்கடே மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதே.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்நிலை குணமடைந்து வரும்போது நான் உடலளவில் மட்டும்தான் அங்கு இருந்தேன். ஆனால், மனது முழுக்க மும்பை இந்தியன்ஸ் அணியுடன்தான் இருந்தது. பும்ரா சிறப்பாக பந்து வீசினார். கடந்த 2-3 ஆண்டுகளாக வலைப்பயிற்சியின்போது பும்ரா பந்துவீச்சில் ஒருபோதும் பேட் செய்ததே கிடையாது. அவரது பந்துவீச்சில் எனது பேட் உடைகிறது அல்லது எனது கால் உடைகிறது” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.