மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி - உத்தரவை திரும்ப பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மேலவளவு ஊராட்சித்தலைவர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வது குற்றவாளியான சேகர் முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு கிராமம். இங்கு 1996-ல் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் மேலவளவைச் சேர்ந்த ராமர் உட்பட 17 பேருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் 17 பேரில் 3 பேர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி சிறையிலிருந்து முன் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகியோர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2019-ல் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் இந்த வழக்கில் குற்றவாளியான சேகரை விடுதலை செய்ததை ரத்து செய்து, மீண்டும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மதுரை சென்னகரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 1997ம் ஆண்டில் மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித்தலைவர் உள்ளிட்ட 6 பேர் படுகொலையான வழக்கில் இதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 15வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தட்டிக்கேட்ட என்னை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு இந்த பகுதியில் நடந்த ஆதிதிராவிடர்கள் கொலையிலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
இதேபோல அவர் தொடர்ந்து ஆதிதிராவிடர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகிறார். அவரை விடுதலை செய்யும் போது அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை
மீறி செயல்பட்டு வருகிறார்.
இதன் மூலம் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதாக அவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே சட்ட விதிகளின்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும். அதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்படி மீண்டும் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.