For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!

08:13 AM Jun 10, 2024 IST | Web Editor
ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ
Advertisement

ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, சோஃபியா பிர்தோஸ் என்ற இஸ்லாமியப் பெண் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன்,  சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.  தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து,  ஆட்சியையும் பறிகொடுத்தது.  இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும்,  சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் முதன் முறையாக முஸ்லீம் பெண் ஒருவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டவர் சோஃபியா பிர்தோஸ்.  இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


32 வயது இளம் எம்எல்ஏ-வான சோஃபியா பிர்தோஸ் அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்.  இவரது தந்தை ஒடிசா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார்.  புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள சோஃபியா,  பெங்களூரு ஐஐஎம்கல்லூரியில் நிர்வாக பொது மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து சோஃபியா கூறுகையில்,  "ஒரு இஸ்லாமிய பெண்ணாக நான் வரலாறு படைத்திருக்கிறேன் என்பது எனக்கு புரிகிறது.  ஆனால், ஒடிசா சட்டசபையில் இன்னும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை.  இந்த முறை தேர்வான 147 எம்எல்ஏ-க்களில் 11 பெண்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.  அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பெண்கள் வர வேண்டும்.  அரசியலில் எனது முன்மாதிரியாக முன்னாள் முதலமைச்சர் நந்தினி சதாபதியை நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement