ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் - கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைது
திருப்பூர்Tiruppur ரயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் வட மாநில தம்பதி குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தனர். இதைப் பார்த்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் அந்த தம்பதியுடன் அறிமுகமாகி, தங்கள் வேலை பார்க்கும் பனியன் கம்பெனி அருகில் உள்ளதாகவும் அங்கு இரண்டு பேரையும் சேர்த்து விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்க இடம் இல்லாததை அறிந்த அந்த மூவர், தங்களின் இருப்பிடம் லட்சுமி நகரில் உள்ளது அங்கு வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று அப்பகுதிக்கு தம்பதியினரை அழைத்துச் சென்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அனைவரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர். அப்போது நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் அந்த பெண்ணின் கணவரை கத்தியை காட்டி மிரட்டி, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்பு அந்த தம்பதியினரை அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த ஒடிசா பெண் தனது கணவர் மற்றும் குழந்தையோடு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த நதீம், டானிஷ், முர்சித் ஆகியோரை அவர்கள் தங்கியுள்ள அறையில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.