#Odisha | மாட்டிறைச்சி சமைத்ததாக 7 மாணவர்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற்றம்!
ஒடிசாவில் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்ததாக குற்றம் சாட்டி, 7 மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள மாநில அரசால் நடத்தப்படும் பர்லா மகாராஜா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் அவர்களது விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த செப். 11-ம் தேதி இரவு விடுதி அறையில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, விதிகள் மற்றும் நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றப்பட்ட மாணவர்கள் விடுதி அறையில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி சமைத்ததாக சிலர் குற்றம் சாட்டி, இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். விடுதியின் இரண்டு அறைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவதாக அக்கல்லூரியின் மாணவர் நல தலைவர் செப். 12-ம் தேதி அறிக்கையை வெளியிட்டார். ஆனால், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அவர் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இதுதவிர, மாணவர்களில் ஒருவருக்கு ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த குழு கல்லூரிக்குச் சென்று மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர். கல்லூரி நிர்வாகம் வெளியேற்றப்பட்ட 7 மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த நடவடிக்கை குறித்து தெரியபடுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள் அருகே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரச்னைகள் எதுவும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பள்ளி முதல்வர் ஒருவர், அசைவ உணவை பள்ளிக்கு கொண்டு வந்ததற்காக 7 வயது மாணவர் ஒருவரை வெளியேற்றினார் என ஒரு வைரல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.