பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஒ.பன்னீர்செல்வம்!
கடந்த ஜூலை 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ஜூலை 27 அன்று கங்கை கொண்ட சோழபுரத்தி நடந்த ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார்.தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று, சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனையின் முடிவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,
”பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுகிறது. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்று நாடே அறியும். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் ஓபிஎஸ் சந்திப்பார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் பன்னீர் செல்வம் சந்திப்பு மற்றும் திமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,” யாரையும் வீழ்த்த வேண்டியது எங்களுடைய குறிக்கோள் அல்ல வாழ்த்துவது தான் எங்களுடைய குறிக்கோள்.நான் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது” என்றார்.