#INDvsNZ | இந்தியா - நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.1) தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூரில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2வது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அதன்மூலம், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியானது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.