பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி - புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில் இவரது காதலனுடன் பழகி கர்ப்பமான நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா அவரது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோதா குழந்தையை அவரது வீட்டு வாசலிலேயே உயிருடன் குழிதோண்டி புதைத்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு பார்த்தபோது குழந்தையின் கை வெளியே தெரிந்துள்ளது. பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்த போது குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் வினோதா மற்றும் அவரது காதலனான வயலோகம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(21) ஆகிய இருவர் மீதும் பனையப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறாக பெற்ற குழந்தையை மறைத்தல், குழந்தையை மறைக்க உடந்தையாக இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
அதன்பேரில், சிலம்பரசனை பனையப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள குழந்தையின் தாய் சிகிச்சையில் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். பெற்ற தாயே தன் குழந்தையை மண்ணில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது