#WeatherUpdate | நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு -வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்தும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தற்போது குறிப்பிட்டுளளார்.
அவர் கூறுகையில், ” கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப்பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி :
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது, தொடர்ந்து அந்த பகுதியை நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.
மழை நிலவரம் :
மழையை பொருத்தவரை அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம். புதுவை. காரைக்கால் பகுதியில் பரவலாக மிதமான மழை பெய்யும். கனமழை எச்சரிக்கை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளைய நிலவரம் :
நாளை (அக்டோபர் 16) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் செய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் நிலவரம் :
அக்டோபர் 17ஆம் தேதியை பொறுத்தவரை வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் 8 செ.மீ., கடலூரில் 3 செ.மீ., புதுச்சேரியில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.