அணு ஆயுத ஒப்பந்த வரம்புகள் மேலும் ஓராண்டுக்கு கடைபிடிக்கப்படும் - ரஷ்ய அதிபர் புதின்..!
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2010ஆம் ஆண்டு புதிய START ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தின் படி, இரு நாட்டிற்கும் 1,550 அணு ஆயுதங்கள் மற்றும் 700 ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது.
இந்த ஒப்பந்தமானது பிப்ரவரி 5, 2026ல் காலாவதியாக உள்ளது. இதனால் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆதரவாளர்களை கவலையடையச் செய்தன. இந்த நிலையில் புதிய START ஒப்பந்தத்தின் வரம்புகளை மேலும் ஒரு ஆண்டிற்கு ரஷ்யா கடைபிடிக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடனான ஒரு கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் , ”2010ஆம் ஆண்டு புதிய START ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பிப்ரவரி 5, 2026க்குப் பிறகு ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தின் வரம்புகளை ரஷ்யா தொடர்ந்து கடைப்பிடிக்கத் தயாராக உள்ளது. அமெரிக்கா மாஸ்கோவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். ஒப்பந்தத்தின் வரம்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று ரஷ்யாவும் எதிர்பார்க்கும்” என்று கூறியுள்ளார்.