ஒவ்வொரு தசரா பண்டிகையின்போதும் நினைவு கூரப்படும் என்.டி.ராமாராவ்! - ஏன் தெரியுமா?
என்.டி.ராமாராவ்.... இந்த மூத்த நடிகர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் இவர் எப்போதும் தசரா விழாவில் நினைவுகூரப்படுகிறார்.
வெள்ளித்திரையில் அழகான ராமனாக இருக்கட்டும்… குறும்புக்கார கிருஷ்ணனாக இருக்கட்டும்.. ஏழுமலையானின் நாயகனாக இருக்கட்டும்… எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திய ஒறே நடிகர் என்றல் அவர் நந்தமுரி தாரக ராமராவ் (என்.டி. ராமாராவ்) மட்டுமே.
மேலும், இயக்குநராக.. தயாரிப்பாளராக ஸ்டுடியோ உரிமையாளராக… அரசியல்வாதியாக…. முதலமைச்சராக எவராலும் முடியாத சாதனைகளைப் படைத்த பன்முக மேதை. இன்று வரை அனைத்து தெலுங்கு மக்களாலும் அண்ணா என்று அழைக்கப்படும் சிறந்த நடிகர் என்டிஆர்.
இந்திய திரையுலகில் ராமர் மற்றும் ராவணன் ஆகிய இரு வேடங்களில் நடித்த ஒரே நடிகர் என்.டி.ராமாராவ் மட்டும் தான். இதுமட்டுமின்றி 17 படங்களில் ஸ்ரீ கிருஷ்ணராகவும் நடித்துள்ளார்.
நந்தமுரி தாரக ராமாராவ் (என்.டி. ராமாராவ்) 1957 ஆம் ஆண்டு வெளியான 'மாயாபஜார்' படத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக நடித்தார். அதன் பிறகு 16 படங்களில் ஸ்ரீ கிருஷ்ணராக நடித்தார். மேலும் அவர் 'லவ் குஷ்' (1963) மற்றும் 'ஸ்ரீ ராமாஞ்சநேய யுத்தம்' (1974) போன்ற சில படங்களில் ராமரின் வேடத்தில் தோன்றினார். இது தவிர 'பூகைலாஸ்' (1958), 'சீதாராம் கல்யாணம்' (1961) போன்ற படங்களிலும் ராவணனாக நடித்தார். 'ஸ்ரீ வெங்கடேஷ்வர மஹாத்யம்' (1960) படத்தில் விஷ்ணுவாகவும், 'தக்ஷயக்னம்' (1962) படத்தில் சிவனாகவும் நடித்தார்.
ராமர், சிவன், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் விஷ்ணு போன்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த பிறகு, மக்கள் அவரை உண்மையான கடவுளாகக் கருதத் தொடங்கியதாகவும் சில கதைகள் உண்டு. ஹைதராபாத்தில் உள்ள அவரது வீடு புனித யாத்திரை ஸ்தலமாக மாறியதற்கு இதுவே காரணமாகவும் சொல்லப்படுகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அவரது பெயரில் அரை டஜன் கணக்கில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் அவர் ராமர் மற்றும் கிருஷ்ணரின் அவதாரங்களில் மக்களால் வணங்கப்படுகிறார்.
புராணக் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல.. சமூக, நாட்டுப்புற, சரித்திரப் படங்களிலும்.. அவர் நடித்தால் அந்தக் கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கும். தெலுங்கு திரையுலக வரலாற்றில் ஒப்பற்ற நாயகனாக ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருப்பவர் என்டிஆர்.