நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் - தமிழ்நாட்டில் கொண்டாட்டங்கள் இல்லையே ஏன்?
நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாட்டங்கள் இல்லையே ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது... மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பெரிதாக கொண்டாட்டம் இல்லாதது ஏன்.. இதன் பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக மக்கள், தங்களின் இனம், மொழி பாகுபாடு இன்றி தேச தலைவர்களை நம்பியே போராடினார்கள். இந்திய சுதந்திர போராட்டம் வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்த போதே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் அமைப்பது குறித்து அரசமைப்பு அவையால் என்.கே. தார் ஆணையம் அமைக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் தேவை இல்லை என்றும், நிர்வாக வசதிக்கேற்ப தான் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரை செய்தது. தார் ஆணையத்தின் பரிந்துரைக்கு அதிருப்தி எழுந்தது.
பிரதமர் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது. இந்த மூன்று பேர் கொண்ட குழுவும் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்க கூடாது என்றே பரிந்துரை செய்தது.
அதன் பின்னர், 'விசால ஆந்திரா', அகண்ட கர்நாடகம்', 'ஐக்கிய கேரளா', 'சம்யுக்த மகாராஷ்டிரம்', 'மகா குஜராத்' உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த பகுதிகளில் உருவாகின. தங்களுக்கென தனி மாநிலம் வேண்டுமென அவர்கள் போராடத் தொடங்கினர். இதன் ஒரு கட்டமாக, 1952, ஜூன் 9-ம் தேதி பொட்டி ஸ்ரீ ராமுலு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். காந்தியவாதியான அவரின் 56 நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்தது, உடல் நலிவுற்று உயிரை விட்டார். அவரின் மரணமும் தெலுங்கு பேசும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 1953 அக்டோபர் 1-ம் தேதி ஆந்திராவைத் தனி மாநிலமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு 1956, நவம்பர் 1-ம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைக்கு வந்தது. மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும் கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது.
மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப்பகுதிகள் அளிக்கப்பட்டதால், தமிழ்நாடு அதிக நிலப்பரப்புகளை இழந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளை அண்டை மாநிலத்தில் இழந்துவிட்டதால் மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் இந்த தினம் கொண்டாடப்படுவதில்லை.