நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!
திருநெல்வேலியில் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 6, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தவறாமல் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் அறிவுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் 23 வேட்பாளர்களில், 9 வேட்பாளர்கள் செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்தனர். 6 பேர் கூட்டத்தில் பங்கேற்றும் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. 8 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : “14 ஆண்டுகள் கூட்டணி... தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன?” - இபிஎஸ் கேள்வி
இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என்றும் மொத்தம் 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.