“மருமகளை அக்கம் பக்கத்தில் பேசக்கூடாது, நள்ளிரவு 1 மணிக்கு குளிக்க சொல்வது கொடுமையல்ல” - உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து!
மருமகளை டிவி பார்க்கவும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள் 2 மாதங்கள் கழித்து 2003-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே 2003 ஹோலி பண்டிகையின் போது மாமியார் வீட்டில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தனது மகள் தயாரித்த உணவைக் கேலி செய்தது, டிவி பார்க்க அனுமதிக்காதது, அக்கம்பக்கத்தினரை சந்திக்க விடாதது, கோயிலுக்கு தனியாக செல்ல விடாதது, அதிகாலை 1.30 மணியளவில் குளித்துவிட்டு, நள்ளிரவில் தண்ணீர் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என கணவர் வீட்டார் செய்த கொடுமையால் தான் தனது மகள் இறந்ததாக பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது பெற்றோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதையடுத்து கணவர் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அபய் வாக்வாஸ் விசாரித்தார். மகளின் பெற்றோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் என்ன வகையான கேலி, கொடுமை செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறிய நீதிபதி, அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பதையும் துன்புறுத்தலாகக் கூற முடியாது என்று குறிப்பிட்டார்.
மேலும் இறந்தவரும், புகார்தாரரும் ஒருவரையொருவர் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆன பிறகே, அந்த பெண் இறந்துள்ளார். இதனால் தற்கொலைக்கும், ஆண் வீட்டாருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார். தற்கொலையுடன் ஆண்வீட்டாரை இணைப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தற்கொலைக்கு காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் வீட்டு விவகாரங்கள் அனைத்தும் மன மற்றும் உடல் ரீதியான துன்பத்தை தரக்கூடியவை அல்ல எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் ஆண்வீட்டாரின் செயல்கள் அனைத்தும் குற்றமாக கருதப்படாது எனவும் தெரிவித்துள்ளது. மும்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தற்போது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.