“சலிப்படையவில்லை, அன்பால் மகிழ்ச்சியடைந்துள்ளேன்” - “IC-814 – The Kandahar Hijack சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் அனுபவ் சின்ஹா பேச்சு!
‘`IC 814 காந்தஹார் ஹைஜாக்’ தொடரின் மதவாத சர்ச்சைகளால் தான் சலிப்படையவில்லை எனவும், தனக்கு கிடைத்த அன்பை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் இயக்குநர் அனுபவ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் விஜய் வர்மா நடிப்பில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆக.29ஆம் தேதி வெளியான வெப்சீரீஸ் `IC 814 காந்தஹார் ஹைஜாக்’. இத்தொடர் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் தளமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ஐ தீவிரவாதிகள் சிலர் கடத்தினர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்தொடரில், கடத்தல்காரர்களில் சிலரின் பெயரை இந்து பெயராக வைத்திருப்பதே விவாதப்பொருளாக மாற காரணம். கடத்தல் காரர்களின் மத அடையளாம் வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரும் அது அந்த கடத்தல்காரர்களின் உண்மையான பெயர்தான் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளால் தான் சலிப்படையவில்லை எனவும், தனக்கு கிடைத்த அன்பை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் இத்தொடரின் இயக்குநர் அனுபவ் சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
எனக்கு கிடைத்த பாராட்டும், அன்பும் மற்ற சர்ச்சைகளை மங்கச் செய்கின்றன. இந்த சர்ச்சைகள் அனைத்தும் முற்றிலும் வேறானவை. நான் அந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை. அதை எப்படி செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்கு படம் பண்ணத்தான் தெரியும். நாங்கள் 2022 முதல் இதற்காக உழைத்து வருகிறோம். ஸ்கிரிப்டில் உண்மையாக இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் நான் ஆக்டிவாக இல்லையென்றாலும், இந்த விவாதங்கள் குறித்து கேள்விப்பட்டேன். முல்க் சமயத்திலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டபோது, பார்வையாளர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஒரு திரைப்பட தயாரிப்பாளராக தூய்மையான மனநிலையுடனே எனது வேலையை அணுகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.