#Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை - 3 பேர் அதிரடி கைது !
குமாரபாளையம் அருகே வட மாநில தொழிலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கல்லால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா, துபலேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் தனியார் நூற்பாலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்ததது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வெப்படை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
அந்த வகையில், வெப்படை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட இருவரிடமும் 3 இளைஞர்கள் தகராறு செய்தது தெரிய வந்தது. சிசிடிவியில் பதிவாகியிருந்த புகைப்படங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பாதரை பகுதியில் இயங்கும் மற்றொரு தனியார் நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த 3 இளைஞர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதன் பேரில் 3 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுபான கடையில் மது அருந்தியபோது ஒடிசா மாநில இளைஞர்கள் தங்களையும், தங்கள் பெற்றோரையும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், இதனால் அவர்களை கொலை செய்ததாகவும் ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து, போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த ராஜன் லகூரி, மான்சிங் சுக்ராய், தசரத்படிங்க் ஆகிய மூன்று இளைஞர்களையும் கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்பு ஆஜர் படுத்தினர். தொடர்ந்து 3 இளைஞர்களையும்15 நாள் சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.